பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
04:07
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களில், இரண்டு மாதத்துக்குப் பிறகு, முழு வழிபாடு நேற்று தொடங்கியது. கொரோனா ஊரடங்கால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், இரண்டு மாதமாக பிரார்த்தனைக்கு அனுமதிக்கவில்லை. குருமார்கள் மட்டும் தினசரி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வில், கடந்த, 5ல் அனைத்து மத ஆலயங்களும் திறக்கப்பட்டன. ஆனால், கிறிஸ்தவ தேவாலயங்களில் குருமார்களின் ஆலோசனைக்கு பின், வழிபாடு தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முறையான ஞாயிறு முதல் வழிபாடு, நேற்று நடந்தது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஒரு வழிப்பாதையில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப நிலை பரிதோசனை, சானிடைசர் கொடுத்து, முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு பிரப் நினைவு ஆலயத்தில், சமூக இடைவெளியுடன் இருக்கை அமைத்து, காலை, 7:00 மணி, 9:00 மணி என இருமுறை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் பிற கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கிறிஸ்தவ மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.