பதிவு செய்த நாள்
23
ஜூலை
2021
03:07
தஞ்சாவூர்: ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் ஏராளமானோர் ஒவ்வொரு கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்ய விரதமிருப்பது வழக்கம்.
அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை, பெளர்னமி என்பதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில், கீழவாசல் வடபத்திரகாளியம்மன், கோடியம்மன், எல்லையம்மன், பர்மாகாலனி அங்காளஈஸ்வரி, வல்லம் ஏகவுரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானார் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதே போல் கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ராகுகால காளியம்மன், திருநல்லுாரில் உள்ள காளியம்மன், திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்கோவில் உள்ள அஷ்டபுஜ காளியம்மன், சன்னாபுரத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன், கருப்பூரில் உள்ள பெட்டிகாளியம்மன், உடையாளூர் செல்வமகாகாளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறற்து. மேலும் கும்பகோணம் பகுதியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், விநாயகர் கோவில்களிலும் உள்ள துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.