திருப்பதி: திருமலை திருப்பதியில் மலையின் உயரத்தில் அமைந்துள்ளது பெருமாள் பாதம். நாராயணகிரி மலையின் உச்சத்தில் கருங்கல்லாலான இரு பாதங்களும் பெருமாளின் பாதங்களாக கருதி நீண்ட காலமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பெருமாள் தனக்கான இடத்தை தேர்வு செய்வதற்காக பூலோகத்தில் முதன் முதலில் கால் வைத்த இடமாக இந்த இடம் போற்றப்படுகிறது.
திருமலை வரக்கூடிய பக்தர்கள் தவறாமல் இங்கே போய் பெருமாளின் பாதத்தை சேவிப்பர். இத்துணை சிறப்பு வாய்ந்த பெருமாளின் பாதத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சத்ரோஸ்தாபனோட்சவம் என்ற நிகழ்வு நடைபெற்றது. திருமலை கோவில் பக்தர்கள் மற்றும் அலுவலர்கள் அஙகு சென்று புனித பாதத்திற்கு பால், தயிர், தேன், இளநீர், மற்றும் சந்தனம் போன்ற திரவியங்களால் அபிசேகம் செய்தனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த நிகழ்வின் நிறைவாக பாதங்களுக்கு புனித குடை சாற்றப்பட்டது.இதன் பின்னர் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.