பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
திருச்செங்கோடு: ‘‘திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருத்தேர், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக புதுப்பிக்கப்படும்,’’ என, அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில், ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு முன்கட்ட பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்கிற சிறப்பு பெற்ற, 110 அடி உயரம் கொண்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாக புதுப்பிக்கப்படும். திருக்கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோடு சின்னதெப்பக்குளம் சீரமைக்கப்படும். அறநிலையத் துறையின் குறைகளை கால்சென்டரில் புகார் செய்ய வசதி ஏற்படுத்தி, 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ஈஸ்வரன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் உள்பட பலர் உடனிருந்தனர்.