பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
சேலம்:தனியாரிடம் கோவில்களை ஒப்படைக்க முடியாது, என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சேலம் சுகவனேஸ்வரர், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகளை நேற்று ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது:அறநிலையத் துறையை பொறுத்தவரை, 10 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள முதல்நிலை கோவில்களில், 539 கோவில்களை பட்டியலிட்டுள்ளோம்.
மாஸ்டர் பிளான்: அதில் கும்பாபிஷேக பணிக்கு எடுத்துக் கொண்ட கோவில், பணி தாமதமாகியுள்ள கோவில், ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோவில் என வகைப்படுத்தியுள்ளோம்.திருப்பணி நடப்பவை, நடக்க வேண்டியவை என அனைத்து கோவில்களுக்கும், மாஸ்டர் பிளான் எனப்படும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சன்னிதானங்கள் மாற்றப்படாமல் ஆகம விதிப்படி திருப்பணி நடக்கும். வாய்ப்புள்ள இடங்களில் கோவில் வளாகத்தில், திருமண மண்டபம் கட்டப்படும்.
முடியாது: அந்தந்த வருவாய், அந்தந்த கோவில்களுக்கு பயன்படுத்தப்படும். ஒன்பது ஆண்டுகளாக கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன. காணிக்கை நகைகளை, கோவில் பயன்பாட்டுக்கு போக, மீதியை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். அறநிலையத் துறை கோவில்கள், தனியார் சொத்துகள் இல்லை. பல மன்னர்கள், ஜமீன்தார், செல்வந்தர்களால் கோவில்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, தனியாரிடம் கோவில்களை ஒப்படைக்க முடியாது.
நானே கொத்தனார் தான்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகளை ஆய்வு செய்தபோது, கல் மண்டபத்தில் எதற்காக கான்கிரீட் துாண் எழுப்பப்பட்டுள்ளது என ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் கேள்வி கேட்டார். அவர் கூறிய பதிலில் திருப்தி அடையாத அமைச்சர், நானே கொத்தனார் தான் என்றார். கட்டுமான பணி தொடர்பாக, 10 நாளில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேரை சுத்தப்படுத்தி, முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
214 ஏக்கர் நிலம் மீட்க உத்தரவு: சேலம் மாவட்டம் ஓமலுார், பாகல்பட்டியில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. பரம்பரை அறங்காவலராக இருந்த ஹேமலதா, கோவில் நலனுக்கு எதிராக செயல்பட்டதால், 2009ல் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சேலம் உதவி கமிஷனர் தக்காராக நியமிக்கப்பட்டார்.தற்போது கோவிலுக்கு சொந்தமாக 214.48 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், பட்டா பெயர் மாற்றத்துக்கு 63 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.இந்நிலையில், கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அறங்காவலர்களிடம் உள்ளதாக கூறப்படும் கோவில் நகை, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க உத்தரவிட்டார்.