பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் திருப்பணிகள் முடிந்த நிலையில் உள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை, விரைவில் நடத்த, தமிழக அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகரில், பவானி ஆற்றின் கரையோரம், 200 ஆண்டுகள் பழமையான, சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், 1984ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் பின் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. அதனால் கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகள், சிதிலமடைந்தன. எனவே, கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தும்படி, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, 2014ல், திருப்பணிகள் தொடங்கின. பல்வேறு காரணங்களால் தொய்வு ஏற்பட்டது. தற்போது கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தின் இருபக்கம், சிவன், அம்பாள் சன்னதிகளும், தீபம் ஏற்றும் கல் துாண் அருகே, நவக்கிரக சன்னதியும், தியான மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.கோவிலின் நுழைவாயில், முன் கோபுரங்களில் உள்ள சிதிலமடைந்த சிலைகள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் அனைத்து திருப்பணிகளும் முடிந்து, கும்பாபிஷேகத்திற்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. எனவே, கும்பாபிஷேகம் விரைவில் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.