பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
04:07
புட்லுார்: புட்லுார் அம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் கூட்டம் களை கட்டியது. சமூக விலகல் கடைபிடிக்காதது மற்றும் கொரோனா விழிப்புணர்வு இல்லாதது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைய ஆரம்பித்த பின் ஜூன் மாதம் முதல், பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு விதிமுறைகளை கோவில் நிர்வாகம் கடைப்பிடிக்க அறநிலையத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், தற்போது, ஆடி மாதம் என்பதால், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கிடா வெட்டுவது, கூழ் வழங்குவது என, தங்களது வேண்டுதலை பல்வேறு வகையில் நிறைவேற்றி வருகின்றனர். இதில் பக்தர்கள் சமூக விலகல் கடைப்பிடிக்காமல், முக கவசம் அணிவதிலும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கொரோனா தொற்று பரவலை தடுக்க பக்தர்கள் அலட்சியம் காட்டி வருவதை கோவில் நிர்வாகத்தினரும் கண்டும், காணாமல் விட்டு விடுகின்றனர். இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.