துாத்துக்குடி: துாத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு சாண்டி தோட்டத்தில் சாக்கு சித்தர் சாமிகளின் பத்தாம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாதுக்கள் கலந்து கொண்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், படர்ந்தபுளி கிராமத்தில் பிறந்தவர் சாக்கு சாமி. இவர் சிறுவயதிலே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு பல நாடுகளுக்கு யாத்திரை சென்றார். கடைசியில் திருச்செந்துாரில் வந்து இவர் முக்தியடைந்தார். இவர் மீது தீவிர பக்தி கொண்டிருந்த சாண்டி கல்விகுழுமதலைவர் செல்வராஜ் இவரை முள்ளக்காட்டில் தனது கல்லுாரி அருகே உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பத்தாம் ஆண்டு குருபூஜைவிழா கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடந்தது. பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் ஓமகண்டம் வளர்த்து பூஜிக்கப்பட்ட புனித நீருடன் சாண்டி செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் புனிதநீர் எடுத்து வர சாதுக்கள், சித்தர்கள் பீடத்தை சுற்றி வந்து புனிதநீர் ஊற்றி சிறப்பு தீபாரதனை செய்தனர்.