சென்னை: காஞ்சி மகா பெரியவர் மணி மண்டபம் உள்ள ஓரிக்கையில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தின் போது தினமும் ருத்ர பாராயணம் நடக்கிறது.
பாரத தேசம் முழுதும் தர்மத்தை நிலைநாட்டி காப்பாற்றுவதற்காக ஸ்ரீ சங்கராச்சாரியார் 2550 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தை நிறுவினார். இதன் சங்கராச்சாரியார்கள் ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிப்பர்.மடத்தின் 70வது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் மகாபெரியவர் மண்டபத்தில் ஜூலை 24ல் வியாச பூஜையுடன் துவங்கினார்.
இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் ஆன்மிக அறிஞர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதம் ஓரிக்கையில் 24ம் தேதி துவங்கி செப். 20ல் நிறைவடைகிறது. இந்த ஆண்டு மகா பெரியவர் மணி மண்டபத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறார்.தினமும் காலை சுவாமி தரிசனம் நடக்கும். பஞ்சாங்க சதஸ் என்ற ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா காரணத்தை முன்னிட்டு இவை ஆன்-லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. பின் அக்னி ஹோத்ர சதஸ், சதுர்வேத பாராயணம், வேத பாஷ்ய சதஸ், அத்வைத வேதாந்த சதஸ், உபன்யாசங்கள், சங்கீத வாத்ய நாமசங்கீர்த்தனங்கள் நடக்கின்றன.ரிக்வேத கன பாராயணம் 40 நாட்கள் தொடர்ந்து காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் நடக்கிறது. ரிக்வேதத்தில் சங்கீத பாராயணம், சாமவேத பாராயணம் நடத்தப்படுகிறது.
சந்திரமவுலீஸ்வரருக்கு தினந்தோறும் அபிஷேகம் ருத்ர பாராயணம் நடக்கும். பின் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், துர்கா ஹோமம் போன்றவை நடத்தப்படுகின்றன. சந்திரமவுலீஸ்வரர் பூஜை தினமும் மூன்று முறை நடக்கும். இந்த பூஜைகளில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இந்த சாதுர்மாஸ்ய பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று ஆச்சாரியரின் அருளைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.