பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
01:07
தை மாத பிறப்பான, உத்தராயண புண்ணிய கால துவக்கத்தை கொண்டாடுவது போல, ஆடி மாத தட்சிணாயன புண்ணிய கால பிறப்பையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆடி மாதம் பிறந்ததில் இருந்து இறுதி வரை, ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன.
ஆடி மாதம் முழுதும், அம்மனுக்கான கொடை திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன. பக்தர்கள் பொங்கல் வைத்து, கூழ் வார்த்து, பால்குடம் ஏந்தி, உடலில் அலகு குத்தி அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவர்.
இந்த மாதத்தில், வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தி பூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் உண்டு. ஆடி மாதம் மழை காலத்தின் துவக்கம். தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். வேம்பும், எலுமிச்சையும் சிறந்த கிருமி நாசினி. பலர் கூடும் கோவில்களில், பிரசாதமாக இவை தரப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.
வெப்பம் குறைவான இந்த நாட்களில், எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. தஷ்ணாயண காலத்தில், சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆடி மாதத்தில் பகல் பொழுது குறைந்தும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்று, மழை அதிகம் இருக்கும். ஆடி மாதம் விவசாயத்திற்காக செலவு செய்யும் காலம். இதனால், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபகாரியங்களை செய்வதில்லை.
ஆடி, பீடை மாதம் என பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதம் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும், பீடு நிறைந்த மாதம். இம்மாதம் முழுதும் தெய்வ சிந்தனையில் இருப்பதால், வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்பதே உண்மை.
ஆடிமாத சிறப்புக்கள்: ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும், நம் முன்னோர்கள் பல பண்டிகைகளை கொண்டாடி, அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.
ஆடி செவ்வாய்: ஆடி மாத செவ்வாய் கிழமைகளில், பெண்கள் அவ்வையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும்; புத்திரபாக்கியம்; குடும்ப மகிழ்ச்சி; திருமண பாக்கியம் போன்றவற்றுக்காகவும், இந்த விரத வழிபாட்டின் வாயிலாக பிரார்த்தனை செய்வர்.
ஆடி வெள்ளி: ஆடி வெள்ளிகிழமையன்று சுமங்கலி பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். புற்றுக்கு பால் வார்த்து, மாவிலக்கு போட்டு, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்வர்.
ஆடி ஞாயிறு: ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவர். நோய்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.
ஆடி அமாவாசை: தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று முன்னோருக்கு திதி கொடுக்க சிறந்த நாள். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடித்து, நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.
ஆடிப்பெருக்குஆடி மாதத்தில் தான் மழை அதிகரித்து, ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அதனை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுவர். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது.
ஆடி கிருத்திகை மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகப் பெருமானுக்கு சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும், சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி, ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து, தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பர்.
ஆடி பூரம்: ஆண்டாள் அவதரித்த தினம், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். எனவே, ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடி பவுர்ணமி: ஆடி அமாவாசை போல, ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாள். இந்த நாளில் தான் நெல்லை மாவட்டம், சங்கரன் கோவிலில் ஆடித் தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தின் கடைசி நாளில், நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். - நமது நிருபர் -