பதிவு செய்த நாள்
01
ஆக
2021
11:08
தஞ்சாவூர் : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம், காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனையின் பெயரில், ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் நீர்நிலைகளிலும், கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய, மூன்று நாட்களுக்கு தடை விதித்து, மாவட்ட கலகெ்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால், தஞ்சாவூர் பெரியகோவில், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறை, கல்லணை மற்றும் காவிரி ஆறுகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டது. தடை உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், இன்று(01ம் தேதி) காலை பெரியகோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும், சிலர் கோவில் வாசலில் நின்றப்படி தரிசனம் செய்தனர். இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிபடி, பக்தர்கள் இன்றி, பூஜைகள் நடைபெறும் என அறநிலையத்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.