பதிவு செய்த நாள்
03
ஆக
2021
11:08
தஞ்சாவூர், கொரோனா எதிரொலியாக இந்தாண்டும் காவிரிக் கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.
தமிழ் மாதங்களில் பெண் தெய்வங்களுக்கு உகந்ததாக மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. அதிலும், பொங்கி வரும் காவிரி அன்னையை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழா, காவிரி கரையோரங்களில் தொன்று தொட்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி கரையோர படித்துறைகளில் பெண்கள் வாழை இலையில் பழம், பூ, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு நடத்துவார்கள். ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொள்வர். புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொள்வதுடன், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவர். இந்நாளில், வற்றா நதிகளை தங்கள் கடவுளாகக் கருதி, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையைத் துவங்குவர். குறிப்பாக டெல்ட மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு காவிரி புஷ்பமண்டபடித்துறை, சுவாமிமலை, கும்பகோணம் பகவத் படித்துறை, மயிலாடுதுறை துலாக்கட்டம், பூம்புகார் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டு முழு கொரோனா பரவல் காரணமாக, கோவில்கள், காவிரிப்படித்துறைகளில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்பட்டது. மக்கள், அவரவர் வீடுகளில் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர். இருப்பினும், காவிரி கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் சிலர் வழக்கம்போல ஆடிப்பெருக்கு விழாவை நீர்நிலைகளில் வழிபாடு நடத்தி கொண்டாடினர். அதேசமயம் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என வளையல் சப்பரம்,மஞ்சள், பழங்களை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.