பதிவு செய்த நாள்
03
ஆக
2021
09:08
சென்னை : கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற 539 கோவில்களில், மூன்று நாள் நடைபெறும் துாய்மை பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்துள்ளது. இம்முறை விழித்துக் கொண்ட தமிழக அரசு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.மக்களின் வழிபாட்டு மாதம் ஆடி என்பதால், அனைத்து கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும், இந்த மாதம் பல விழாக்களும் உள்ளன.இதை கருத்தில் கொண்டு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்.சென்னையில் வடபழநி ஆண்டவர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட, 539 கோவில்களில் மூன்று நாட்கள் நடைபெறும் துாய்மை பணி நேற்று துவங்கியது. இப்பணியில், கோவில்களின் உட்பிரஹாரம், நந்தவனம், குளம், தண்ணீர் தொட்டி, மதில் சுவர்கள், விமான கலசங்கள், மண்டபம், கோவில் சிற்பங்கள், துாண்கள் உள்ளிட்டவை துாய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், உழவாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.