பதிவு செய்த நாள்
05
ஆக
2021
10:08
மாண்டியா: ராம்நகர் - சென்னப்பட்டணா எல்லை கிராமமான கவுடகரேவில், 66 அடி உயரமான சாமுண்டீஸ்வரி உருவச்சிலை, வரும், 8ம் தேதி திறக்கப்படுகிறது. ராம்நகரின் சென்னப்பட்டணா எல்லைப்புறத்தில், சாமுண்டீஸ்வரி காவல் தெய்வமாக விளங்குகிறார். இப்பகுதி புண்ணியதலமாக விளங்குகிறது. கோவில் நிர்வாகத்தினர், புதிதாக 66 அடி உயரமான பஞ்சலோக சாமுண்டீஸ்வரி உருவச்சிலை அமைத்துள்ளனர். ஆக., 8ல் இந்த உருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது.
இது குறித்து கோவில் தர்மகர்த்தா மல்லேஷ் கூறியதாவது: தெற்காசியாவிலேயே மிக உயரமான, தங்கமுலாம் பூசப்பட்ட பஞ்சலோக சாமுண்டீஸ்வரி சிலை இதுவாகும். ஆக., 8ல் திறந்து வைக்கப்படுகிறது. அன்று அதிகாலை 2:00 மணியிலிருந்து, ருத்ராபிஷேகம், சக்ராபிஷேகம், காலை 4:28 மணிக்கு மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடக்கும்.காலை 7:28 மணிக்கு, இரண்டாவது மஹாமங்களாரத்தி, சிறப்பு பூஜைகள் நடக்கும். நந்திக்கு பாலாபிஷகம் உட்பட, பல்வேறு பூஜைகள், கைங்கர்யங்கள் நடக்கும். இந்த உருவச்சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மிகவும் சாந்தமான முகத்துடன் காட்சியளிக்கும் சாமுண்டீஸ்வரி உருவச்சிலை அமைக்க, பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்த, 16 டன் உலோகம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா பரவுவதால், அரசின் உத்தரவுபடி முன்னெச்சரிக்கையுடன், எளிமையாக நிகழ்ச்சி நடத்தப்படும். பல இடங்களிலிருந்து, பக்தர்கள் வருகை தருவர். பக்தர்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.