பதிவு செய்த நாள்
05
ஆக
2021
10:08
பல்லடம்: பல்லடம் அருகே, துர்க்கை அம்மன் கோவில் வேப்ப மரத்தின் வேரில் இருந்து தண்ணீர் சுரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கான சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, கோவில் முன்புறம் உள்ள வேப்ப மரத்தின் வேரிலிருந்து, தண்ணீர் சுரந்தது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆக., 28 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நேற்று காலை முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, கோவில் முன்புறம் உள்ள அம்மனின் ஊஞ்சலுக்காக நடப்பட்ட கற்களை எடுக்க முயன்றோம். பல மணிநேரம் போராடியும் கற்களை எடுக்க முடியாமல், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கற்களை அகற்றினோம்.
இதையடுத்து, கற்கள் அகற்றப்பட்ட இடத்தில் கோவில் முன் உள்ள நூற்றாண்டு பழமையான வேப்ப மரத்தின் வேர் பகுதியில் இருந்து தண்ணீர் சுரந்தது. குடிநீர் குழாய் உடைந்து இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், வேப்ப மர வேரில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியது வியப்பாக இருந்தது. மேலும், தண்ணீர் வேப்ப இலை வாசனையுடன் கசப்பின்றி சுவையாக இருந்தது என்றனர். வேரில் இருந்து தண்ணீர் சுரந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், கோவில் முன் கூடினர். தண்ணீர் சுரந்த இடத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டதுடன், தண்ணீரை தீர்த்தமாக நினைத்து அருந்தி துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர். வேப்ப மரத்தில் இருந்து பால் சுரந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அதுபோல், வேப்பமர வேரில் இருந்து தண்ணீர் சுரந்தது, பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.