செப்.,1 முதல் கோயில் இடங்களுக்கு ஆன்லைனில் வாடகை வசூலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 04:08
மதுரை:ஹிந்து அறநிலையத்துறை கோயில் இடங்களில் குத்தகை, வாடகைக்கு இருப்போர் செப்.,1 முதல் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் நடைமுறைப்படுத்தும் போது குழப்பம் ஏற்படும். இதை தவிர்க்க சில மாதங்களுக்கு ஆன்லைன் வசதியுடன் ரசீது முறையும் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலம் அனைத்து கோயில்களின் வாடகை வருவாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. செப்.,1 முதல் ஆன்லைனில் மட்டுமே வாடகை, குத்தகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் பணியாளர்களுக்கே இன்னும் விழிப்புணர்வு இல்லாத நிலையில், வாடகைக்கு இருப்பவரின் நிலை பரிதாபம்தான். தற்போது நேரில் பணம் வசூலிக்கும்போதே நாளை வாருங்கள். நீதிமன்றம் வழக்கு உள்ளது என இழுத்தடிக்கும் சில கடைக்காரர்களைஆன்லைனில் வாடகை செலுத்த சொல் வது நம் விரலை கொண்டே நம் கண்ணை குத்துவதற்கு சமம்என்கின்றனர் கோயில் பணியாளர்கள்.
அவர்கள் கூறியதாகவது: பெரிய கோயில்களில் ஆன்லைனில் வாடகை செலுத்தும் முறை உள்ளது. செப்.,1 முதல் சிறிய கோயில்களிலும் ஆன்லைனில்தான் வாடகை வசூலிக்க வேண்டும் என்கின்றனர். நாங்கள் நேரில் சென்று வாடகை கேட்டாலே இன்று போய் நாளை வா என அலைக்கழிப்பவர்கள், ஆன்லைனில் எப்படி முறையாக வாடகை செலுத்துவார்கள். தவிர, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாக கவனத்திற்கு வராமலேயே ஆன்லைனில் நேரடியாக தலைமை அலுவலகத்திற்கு வாடகை செலுத்துவதால் குழப்பங்கள் ஏற்படும். ஆன்லைனில் வாடகை செலுத்திய விபரத்தை கோயில் நிர்வாகம் பராமரிக்கும் கேட்பு வசூல் நிலுவை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர். இதுவும் குழப்பத்திற்கு வழிவகுக்கும். ஆன்லைன் வசதி குறித்து கோயில் பணியாளர்களுக்கும், வாடகை, குத்தகைதாரர்களுக்கும் போதிய பயிற்சி அளித்த பிறகு முழுமையாக அமல்படுத்தலாம். அதுவரை ஆன்லைன் வசதியுடன் தற்போதைய ரசீது முறையும் தொடர்ந்தால் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றனர்.