பதிவு செய்த நாள்
22
ஜூன்
2012
01:06
நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரம். அது தவிர ரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. ரத்தினம் என்பது அலுமினியமும், ஆக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17ம் நூற்றாண்டில் ரத்தினக்கற்கள் ராஜ ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராக கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. 18ம் நூற்றாண்டில் போர்த்திக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,608 கேரட். உலகின் பெரிய தொழிலதிபர்கள், வன ஆய்வாளர்கள் புஷ்பராகம் அணிகிறார்கள். கடலில் கிடைப்பது முத்து. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறத்திலும் கூட முத்துக்கள் உள்ளன. இது முழுக்கமுழுக்க கால்சியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் விலை அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
முத்துக்களை போலவே பவளத்திற்கும் கடல் தான் வீடு. வெதுவெதுப்பான நீர் பகுதியில் இது விளையும். பவளப்பூச்சி என்ற கடல்வாழ் உயிரினம், கரையான் கூடு போன்று கட்டும் புற்றே பவளப்பாறைகள் ஆகும். ரத்தம் போல் ஜொலிக்கும் பவளம் தான் ஒரிஜினல். சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவளப்பாறைகள் அழிய தொடங்கியபிறகு, பவளத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மாணிக்கம், ரத்தினம் இவை இரண்டுமே பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல்தான். காதலின் அடையளமாக காதலர்கள் மத்தியில் மாணிக்கத்திற்கு மவுசு அதிகம். பூமிக்கு அடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் லாவா என்ற எரிமலை குழம்பு வெளியே வந்தால், அதுதான் வைடூரியம். வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு 3வது இடம். பச்சை நிறத்தில் பளபளப்பது மரகதம். சிறிய கல் கூட பல லட்சம் விலை கொண்டது. மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற முக்கிய கோயில்களில் மூலவர் சிலையே மரகதத்தால் ஆனது. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது. நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது, கோமேதகம். பசுவின் கோமிய நிறத்தில் இது இருப்பதால், அந்தப் பெயர் வந்தது. நகைகளின் பளபளப்பை கூட்டுகிறது. இதில் போலிகளை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கோமேதக வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது.