பதிவு செய்த நாள்
21
ஆக
2021
03:08
பிள்ளையார்பட்டி: தமிழகத்தில் அண்மையில் ‛ அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று கோயில்களில் புதிய அர்ச்சகர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. இதனால் கோயில்களில் ஆகம விதிமுறைகள் மீறல், பூஜைகள் பாதிக்கப்படுகின்றன.
புதிய அர்ச்சகருக்கு பொறுப்பு, பாரம்பரிய மூத்த அர்ச்சகருக்கு ஓய்வளிப்பது, பணிகுறைப்பு என்றெல்லாம் புகார்கள் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் சிவநெறிக் கழகம் சார்பில் நடைபெறும் கற்பகவிநாயகர் வேதபாடசாலையில் ‛ஆதி சிவ சிவாச்சார்யர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறு நீங்க விநாயகரை வேண்டி’ சிறப்பு பாராயணம் சிவாச்சார்யர்களால் நடத்தப்பட்டது.
கற்பக விநாயகர் கோயில் தலைமைக் குருக்களும், வேதாபாடசாலை நிறுவனரும், முதல்வருமான பிச்சைச் சிவாச்சாரியார் பாராயண நிகழ்வை துவக்கி வைத்து பேசுகையில்,‛ இன்றைய சூழலில் ஆதி சைவ சிவாச்சார்யர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை நீக்குவதற்காக விநாயகப் பெருமானை வேண்டி கோரிக்கைகளை சமர்ப்பித்து பிரார்த்திக்கிறோம். 1008 அவர்த்தி கணபதி ஹோம பாராயணம் நடைபெறுகிறது. இதில் அறிஞர்கள்,அன்பர்கள்,பாடசாலை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விசயம் தற்போது கோர்ட்டில் உள்ளதால் அதிகமாக பேச விரும்பவில்லை.. எங்களுடைய வேண்டுகோளை விநாயகப் பெருமானிடம் சமர்ப்பித்து பிரார்த்திக்கிறோம். ஆயிரம் ஆவர்த்தி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் அனுகூலம் ஆகும். யார் மீதும் நமக்கு வெறுப்பு இல்லை. யாரையும் புண்பட பேசவில்லை. நமது பரம்பரை,பரம்பரையாய் வரும் ஆதி சிவ சிவாச்சார்யர்கள் சிவாலயங்களில் பூஜை செய்வதை இடையூறு நிகழ்வதை தமிழ்நாடு முழுவதும் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். காலத்தைத்தான் குறை சொல்ல முடியும். ஆதிசிவ சிவாச்சார்யர்களுக்கு வட மொழி நுால்களில் ஏராளமான ஆதாரங்கள் பூஜைக்காக இருந்தாலும், தமிழ்நாட்டில் சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனர் புாராணத்தில் மிக,மிக அழகாக ‛ அருமறை நாவல் ஆதி சிவன் ஆருரன்’ என்றும், முப்போதும் திருமேனி வேண்டுவார் என்று கடந்த காலத்திலும், நிகழ்காலதி்லும், எதிர்காலத்திலும் பூஜை செய்து அப்போது ஆர்வமிகுந்தவராய், வளமாய் இருந்தாலும், வறுமையில் இருந்தாலும் இறைவனிடம் ஈடுபாடு கொண்டவராய், எந்த நேரத்திலும் இறைவனிடம் பற்று நீங்காத குடும்பத்தினராய் உள்ளனர் என்பதை உலகம் முழுவதும் பலரும் சொல்லி வருகின்றனர்.
அவர்களுக்கு நன்றி. உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் உய்ய வேண்டும் என்பதற்காக இந்த பூஜை. பூஜை என்பது இரண்டு .ஓன்று ஆன்மார்த்த பூஜை, மற்றொன்று பரார்த்த பூஜை . ஆன்மார்த்த பூஜை என்பது தீட்சை பெற்று அவரரவர் வீட்டில் குடும்பங்களுக்காக பண்ணுவது. பரார்த்த பூஜை என்பது உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலம் பெறுவதற்காக ஒரு இடத்தில் ஸ்தாபிக்கப் பெற்று பண்ணுவது. அதில் சிவாலய பூஜைகளை ஆதி சிவ சிவார்ச்சார்யர்கள் மட்டும் பல நுாற்றாண்டுகளாக பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். வேறு யாரும் பண்ணுவதில்லை. மற்ற காளியம்மன்,கருப்பர்,அம்மன், அய்யனார் கோயில்களில் பல்வேறு சமுதாயச்தைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்கின்றனர். எங்களோடு இணைந்து செயல்படுகின்றனர். இதில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவது தான் மனவேதனையைத் தருகிறது. நாங்கள் யாருக்கும் விரோதமானவர்கள் அல்லர். அரசியல் ஈடுபாடோ, பிறமத துவேசமோ கிடையாது. அவரவர் அவரவர் கோயில்களில் பாரம்பரியமாக பூஜை செய்கிறோம். பல்வேறு சமூகத்தினரும் எங்களுக்கு பெருத்த ஆதரவு தருகின்றனர். அறியாமையால் சிலர் இப்படி செய்து கொண்டிருப்பது மனவருத்தத்தைத் தருகிறது. அதற்காகத்தான் இந்த பாராயணம். பின்னால் எல்லாம் நல்லதே நடக்கும் என்றும், உலகில் அனைவரும் சவுக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்’ என்றார். சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள்,சிவாச்சார்யர்கள், பாடசாலை மாணவர்கள் பாராயணத்தில் பங்கேற்றனர்.