திருப்பதி: திருமலையில், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, எளிதில் உரமாகக் கூடிய பசுமை பைகளின் விற்பனை துவங்கியுள்ளது.
திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டாலும், ஏழுமலையான் லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கவர்கள், 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது. அதற்கு மாற்றாக பல்வேறு காகித பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி வந்தது. லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்கும் வகையில் எளிதில் மக்கி உரமாகும் தன்மை வாய்ந்த மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய லட்டு பைகள் தயாரிக்கப்பட்டுஉள்ளன. அதன் விற்பனை திருமலையில் நேற்று துவங்கப்பட்டது. சோளத்தட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பைகள் ஒருமுறை பயன்படுத்தி எறியப்பட்டாலும், 90 நாட்களுக்குள் மக்க கூடியவை. இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.