பதிவு செய்த நாள்
25
ஆக
2021
11:08
சென்னை : சென்னையில், ராகவேந்திர சுவாமிகளின், 350வது ஆராதனை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், 16ம் நுாற்றாண்டைசேர்ந்த ஹிந்து மத மகான். விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுபவர். இவர், வைணவ நெறியையும், மத்வர் நிலைநாட்டிய துவைத சித்தாந்தத்தையும் பின்பற்றி, சிஷ்யர்களுக்கும் போதித்தவர். தமிழகத்தில், கடலுார் மாவட்டம் புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், கும்பகோணத்தில் குருகுலவாசம் இருந்து, தஞ்சையில் சன்னியாசம் பெற்றார். ஆந்திர மாநிலம் மந்திராலயம் என்ற இடத்தில், 1671ல் ஜீவ சமாதி நிலையை அடைந்தார். அவரின், 350வது ஆராதனை விழா நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, சென்னை, நங்கநல்லுாரில் தட்சிண மந்திராலயம் என அழைக்கப்படும் ராகவேந்திரர் கோவிலில் சுவாமிக்கு பஞ்சாமிருத அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதைப்போல, திருவல்லிக்கேணி, தாம்பரம், மடிப்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட ராகவேந்திரர் கோவில்களில் ஆராதனை விழா விமரிசையாக நடத்தப்பட்டன; ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.