கோயில் நிலத்திற்கு இழப்பீடு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2021 09:08
சென்னை : கோயில் நிலத்தை கையகப்படுத்தும் போது சட்டப்படி அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வீரசோழபுரம் பகுதி அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மாவட்டகலெக்டர் அலுவலகம் கட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை விதிக்கக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி அவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒப்பந்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்த போது சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட அனுமதி பெறவில்லை. தற்போது அனுமதி பெற்றுள்ளதால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் அதிகாரிகள் நிர்ணயிக்கும் இழப்பீடு தொகை கோயிலுக்கு வழங்கப்படும் என்றார். மனுதாரர் தரப்பில் நிலத்தை ஏற்கனவே மதிப்பீடு செய்த மதிப்பீட்டாளர் முறையாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கோயில் நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தால் 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குத்தகைக்கு எடுப்பதாக இருந்தால் அப்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் தொகையை அதிகரிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது நிலத்தை மதிப்பீடு செய்ய நான்கு அல்லது ஆறு தகுதி பெற்ற மதிப்பீட்டாளர்களை மனுதாரர் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஆக.31ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.