ராஜபாளையம்: சங்கடங்கள் பெருகும் போது மனிதனின் துயர் துடைக்கும் அரு மருந்தாக வழி காட்டுவது ஆன்மிகம் மட்டுமே. வெற்றி வரும் போது, தான் என்ற அகந்தை அதிகரித்து தன்னை விஞ்சியவர் எவரும் இல்லை என்ற தலைக்கனத்தால் சுற்றி திரிவதும், மாறாக தோல்வி பயத்தில் மனம் உருகி பிரார்த்திப்பதும் இறைவனிடம் மட்டுமே நிகழும் விந்தை. அந்த வகையில் ராஜபாளையம் நகரில் இரண்டு நுாற்றாண்டுகளுக்கு மேல் காவல் தெய்வமாக புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது.
முன்பு இவ்வழியே சென்ற வணிகர்கள் கோயிலின் முன்பு உள்ள வேப்ப மரத்தில் தாங்கள் கொண்டுவந்த உணவினை வைத்து வழிபட்டு திரும்பி வரும்போது இரண்டு நாள் கடந்தும் கெடாமல் வைத்தது வைத்தபடி காத்து அருள் பாலித்தார். மரத்தின் கீழ் பீடமாக இருந்த அம்மனை கோயில் கட்டி முறையான வழிபாட்டின் கீழ் தற்போது வைத்துள்ளனர். அம்மை நோய் கண்டவர்களுக்கு வேப்பிலை வீசுதல் இங்கு பிரசித்தம். இது தவிர திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, நாட்பட்ட நோய்களுக்கு அம்மனிடம் வேண்டி அதற்கான நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். ஆடி மாத வெள்ளி, செவ்வாஏலய் சிறப்பு பூஜைகளும் மாதாந்திர வெள்ளி, ஆடி மாதத்தில் வளையல் அலங்காரம், இரண்டாவது வெள்ளி விளக்கு பூஜை பிரசித்தம். இது தவிர பங்குனி பொங்கல், சித்திரை திருவிழா 11 நாட்கள் விமர்சையாக பக்தர்களால் கொண்டாடப்படும்.
பூக்குழி திருவிழாவின் போது ஆண்டுதோறும் 6 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் சிறப்பாக வேப்பிலை ஆடை மட்டும் உடுத்தி இறங்குவது இப்பகுதியினர் இடையே வழக்கம். ராஜபாளையம் மட்டுமில்லாமல் திருவிழாவின்போது பல பகுதிகள் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி, மாதாந்திர செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் திரளான மக்கள் வழிபடுகின்றனர். வேண்டியவர்கள் மனக்கவலை போக்குவதுடன் ராஜபாளையம் சுற்றுப்பகுதி காவல் தெய்வமாக பெரிய மாரியம்மன் விளங்குகிறார்.