பதிவு செய்த நாள்
28
ஆக
2021
11:08
சென்னை: விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அலுவலர்களுக்கு பணிச்சுமைகள் குறைக்கப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை தலைமையகத்தில், கோவில்கள் மேம்பாடு, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. அதில், அமைச்சர் கூறியதாவது: அறநிலையத் துறை, இறைவனுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறை. கோவில்களில் விரைவில் திருப்பணிகளை முடித்து, குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அலுவலர்களுக்கு பணிச்சுமைகள் குறைக்கப்படும். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்களை பராமரித்து வருவாயை பெருக்க வேண்டும். கோவில் யானைகளுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை நடத்த வேண்டும். விழா காலங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில், யானைகளை இயற்கையான சூழ்நிலைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.