பகவான் கிருஷ்ணர் நான் மட்டுமே உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு லீலையை நிகழ்த்தினார். கண்ணனுக்கு ஏழு வயது நடந்தது. அவரது தாய்மாமன் கம்சன் அவரைக் கொல்ல பல வழிகளிலும் முயற்சித்தான். கிருஷ்ணரைப் பிடிக்கப் பாய்வான். ஆனால், அவர் வேறு எங்காவது போய் நிற்பார். அங்கே ஓடினால், பழைய இடத்திற்கே வந்து விடுவார். சிரமப்பட்டு பிடிக்க அருகில் நெருங்கினால் பத்து பதினைந்து இடங்களில் நின்று சிரிப்பார். அதில் யார் உண்மைக் கண்ணன் என தெரியாமல் கம்சன் விழிப்பான். ஒரு கட்டத்தில், நீ மாயம் செய்து என்னிடம் இருந்து தப்பிக்கிறாய். என் பலத்தை மீறி தப்பிக்க முடியுமா? என்று ஆவேசமாகக் கேட் டான். குழந்தைக் கண்ணன் கம்சனைக் கீழே தள்ளினார். கம்சன் மல்லாக்க விழுந்தான். அவனது மார்பின் மேல் கண்ணன் ஏறி அமர்ந்தார். கம்சனால் அந்த எடையைத் தாங்கவே முடியவில்லை. ஐயோ! என்ன இது! குழந்தையாக இருந்து இப்படி கனமாக இருக்கிறாயே! என்னை விட்டுவிடு எனக் கதறினான். மாமா! இப்போது புரிகிறதா! நான் செய்தது மாயமல்ல என்று! என் தாய், தந்தையர், எனக்கு முன் பிறந்தோரை இம்சை செய்த நீ அழிந்து போ, என்று சொல்லி கொன்றார். பகவான் கிருஷ்ணர் மட்டுமே உலகில் மிகுந்த பலசாலி. அவரை மீறி எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களும் ஏதும் செய்ய முடியாது.