கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன். அவன் தன் மருமகனான கம்சனைக் கொன்ற கண்ணனை அழிக்க தன் படைகளை மதுரா நகரின் மீது ஏவினான். ஆனாலும் அவர்களால் கண்ணனை பிடிக்க முடியவில்லை. விடாப்பிடியாக 18 முறை போர் தொடுத்ததால் அங்கிருந்த யாதவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் பின் கண்ணன் மேற்குத் திசையிலுள்ள கடலுக்குள் இருந்த தீவு ஒன்றுக்கு அவர்களைக் குடியேறச் செய்தார். அங்கு ‘துவாரகா’ என்னும் நகரை உருவாக்கினார். குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தீவில் தான் புகழ் மிக்க ‘துவாராக நாத்ஜி’ கோயில் உள்ளது. ‘ஜகத் மந்திர்’ என அழைக்கப்படும் இக்கோயிலின் பிரதான வாசலுக்கு ‘சுவர்க்க துவாரம்’ என்று பெயர். இதனையடுத்து ‘மோட்ச துவாரம்’ என்னும் வாசல் உள்ளது. அதையும் கடந்தால் துவாரகை மன்னரான கண்ணனை தரிசிக்கலாம். இந்த வாசல்களுக்கு இடையே தேவகி, பலராமர், ராதா, சத்திய பாமா, லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி சன்னதிகள் உள்ளன. ருக்மணி தேவிக்குத் தனிக்கோயில் இங்குள்ளது.