பதிவு செய்த நாள்
30
ஆக
2021
11:08
கோவை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் அருள்பாலித்தார். கோகுலாஷ்டமியை முன்னிட்டு உடுமலை நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவாலயங்களில் இன்றும் பெருமாள் கோவில்களில், நாளையும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.ஜென்மாஷ்டமி என்றழைக்கப்படும் கிருஷ்ணஜெயந்தி விழா, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சிவாலயங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் கிருஷ்ணரின் பிறப்பும், நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளும் ஒலிபெருக்கி வாயிலாக, சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.விஷ்வஹிந்து பரிஷத்தின் துவக்க தினமான, ஸ்தாபன திவஸ் விழாவும், ஒன்பதாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவும், கோவையில் இன்று மாலை நடக்கிறது.ரத்தினபுரியிலுள்ள மேஸ்திரி மாறன் வீதி விநாயகர் கோவில், சுப்பாத்தாள் லே அவுட் முத்துமாரியம்மன் கோவில், தயிர் இட்டேரி சக்திமாரியம்மன் கோவில், வி.சி.கே.நடராஜன் லே அவுட் தண்டுமாரியம்மன் கோவில், ஆகிய நான்கு இடங்களில் நடைபெறுகிறது.இதே போல், விவேகானந்தர் பேரவை மற்றும் தமிழக ஹிந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பெரிய கடைவீதி கெரடி கோவில் வளாகத்தில், இன்று இரவு 7:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் மாறுவேடம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பெருமாள் கோவிலில், நாளை கிருஷ்ணர் பிறப்பை போற்றும் வைபவங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து பத்து நாட்களுக்கு, வெண்ணைதாளி, உரியடி, வழுக்குமரம் ஏறும் உற்சவம், மாறுவேடம், கலைநிகழ்ச்சி உள்ளிட்டவை உற்சாகமாக ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுகிறது.