பதிவு செய்த நாள்
03
செப்
2021
10:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் சதுர்த்தி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். சதுர்த்தி விழாவில் தொடக்கமாக கொடியேற்றமும், அதைத் தொடர்ந்து தினமும் மாலையில், குதிரை, காளை, மூசிக, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், விநாயகர் ஊர்வலமும் நடைபெற்றும். விழாவின் எட்டாம் நாளில், சித்தி, புத்தி ஆகிய இருதேவியருடன், விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். தமிழகத்தில் இரு தேவியருடன், இக்கோயிலில் மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோவிலில், கடந்த ஆண்டு கொரனோ பாதிப்பின் காரணமாக விழா நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு சதுர்த்தி விழா நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில், சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் மேற்கொள்ளாததால், கொடியேற்றம் மற்றும் சதுர்த்தி விழா நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல், விழா நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.