‘திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஆறும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகள். இத்தலங்களை தரிசிக்கச் செல்பவர்கள் ஒவ்வொரு இடமாகப் பயணம் செய்து சுவாமியை தரிசிக்க வேண்டியிருக்கிறது. இந்த ஆறும் ஓரிடத்தில் அமையுமானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? பக்தர்கள் ஒரே இடத்தில் வழிபட்டு மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா’ என்று முருக பக்தர்களின் மீதுள்ள ஈடுபட்டால்....இப்படி சிந்தித்தது காஞ்சி மஹாபெரியவரின் மனம். முருகனின் அடியவரான பாம்பன் சுவாமிகளின் சமாதி சென்னையில் உள்ளது. இவர் தாம் ஸித்தி அடையும் முன்பாக, ‘சென்னை கடற்கரை ஓரமாக முருகப் பெருமானுக்கு பெரிய கோயில் ஒன்று கட்டாயம் அமையும்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை காஞ்சி மஹாபெரியவரும் அறிந்திருந்தார். இந்த சூழலில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஒருமுறை பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் ‘‘அறுபடை வீடுகளுக்கும் ஒரே இடத்தில் கோயில் அமைய விரும்புகிறேன். அதற்கு பொருத்தமான இடத்தை சென்னை கடற்கரையில் அரசின் தரப்பில் அளித்தால் நன்றாக இருக்கும்’’ எனத் தெரிவித்தார். நெகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் ஆவன செய்வதாக உறுதியளித்தார். ஓரிரு மாதங்களில் சென்னை பெசன்ட் நகரில் இடம் வழங்கவும் உத்தரவிட்டார். பக்தர்களின் பங்களிப்புடன் இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு கோயில் நிர்மாணிக்கப்பட்டது. இப்போது ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகப்பெருமானை நாம் தரிசிக்கலாம். இக்கோயிலில் திருமணம் நடத்துவதை பக்தர்கள் பாக்கியமாக கருதுகின்றனர். பெரியவரை தரிசித்த அனுபவம் பற்றி எம்..ஜி.ஆர், ‘‘ஞானத்தில் பழுத்தவர் காஞ்சி மஹாபெரியவர். பற்றற்ற மனதுடன் மற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அருளாளர். அவரை தரிசிப்பதில் மனநிறைவு அடைகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.