பதிவு செய்த நாள்
10
செப்
2021
06:09
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா, உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவிட் தொற்று காரணமாக விநாயகர் சிலையை, பொது இடங்களில் வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழக அரசு விதித்திருந்தது. ஆனாலும், அதையும் மீறி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என, இந்து அமைப்புகள் அறிவித்து இருந்தன. இந்நிலையில், நேற்று , துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், பொது இடத்தில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது, சிறிய அளவிலான சிலைகளை விநாயகர் கோவிலை ஒட்டிய பகுதிகள் மற்றும் தனியார் இடங்களில் கோவிட் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வைத்துக்கொள்ளலாம் என, போலீசார் ஆலோசனை கூறி இருந்தனர். இதை ஏற்று இந்து முன்னணியின் சார்பில் துடியலூரில், 17, கவுண்டம்பாளையத்தில், 28, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில், 34, சரவணம்பட்டி, 18, இடிகரை, 6 என மொத்தம், 103 சிலைகள் விநாயகர் கோவில் மற்றும் தனியார் இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு ஹோமங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தவிர, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள விநாயகர் கோவில்களில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது.