பதிவு செய்த நாள்
11
செப்
2021
05:09
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் தடையை மீறி இந்து முன்னணி சார்பில், 24 பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மாலையில் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. அன்னூர் வட்டாரத்தில், அன்னூர் நகர், கஞ்சப்பள்ளி, கணேசபுரம், அக்கரை செங்கப்பள்ளி, அச்சம்பாளையம், ஜெ.ஜெ. நகர் உள்ளிட்ட 24 இடங்களில் அரசு தடையை மீறி நேற்று அதிகாலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு, அனைத்து விநாயகர்களும் அன்னூர் ஓதிமலை ரோட்டுக்கு சரக்கு ஆட்டோ மற்றும் வேன்களில் கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பிறகு அவற்றை சிறுமுகை பவானி ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர்.
இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி காவி கொடியசைத்து விசர்ஜனத்திற்கு அனுப்பி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, நகர தலைவர் சிவக்குமார், ஒன்றிய தலைவர்கள் மாரப்பன், பிரகாஷ் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசார் விநாயகர் செல்லும் வாகனங்களில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறி மற்றவர்களை இறக்கி விட்டனர். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அன்னூர் போலீசார் 50 பேர், தாசில்தார்கள் ரத்தினம், ரங்கராஜன் உள்ளிட்டோர் விநாயகர் சதுர்த்தி விழாவை கண்காணித்தனர். பிள்ளையப்பம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு விநாயகர் சதுர்த்தி பந்தலை போலீசார் சிலருடன் சேர்ந்து அகற்றியதால், மாவட்ட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். மறியலில் ஈடுபடப் போவதாக கூறினர். இன்ஸ்பெக்டர் நித்யா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். அரசு பொது இடங்களில் விநாயகர் வைக்க அனுமதி இல்லை என்று கூறிய போதும் அன்னூர் மற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. எனினும் ஊர்வலம் நடைபெறவில்லை.