பதிவு செய்த நாள்
17
செப்
2021
11:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், பழமையான கந்தபாலீஸ்வரர் கோவில் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.
புதர் மண்டிய இக்கோவிலை, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, புதர்களுக்கு மத்தியில், மண்ணில் புதைந்திருந்த 6 அடி உயரம், 2 அடி அகலமுடைய சிலை ஒன்றை, அப்பகுதியினர் கண்டனர்.இச்சிலை குறித்து உத்திர மேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:இச்சிலை 11ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இது, நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் 64 அவதாரங்களில் 54வது அவதாரமான பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை. அதாவது புராணத்தின்படி சிவன், பிரம்மா ஆகிய இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், பிரம்மாவின் ஒரு தலையை சிவன் எடுத்ததால், பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என, அவர் அழைக்கப்பட்டார். தமிழகத்தில் இதுவரை சிவனின் இந்த அவதார சிலை கண்டறியப்படவில்லை. இது மிக மிக அரியது.இந்த தகவலை, தமிழக தொல்லியல் துறை சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜன், அவரது குழு உறுதி செய்துள்ளது.
இம்மாதிரியான அரிய வகை சிலையை, முறையாக பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.விஜய நகர சதி கல்வாலாஜாபாத் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், 14ம் நுாற்றாண்டைச்சேர்ந்த விஜய நகர மன்னர் காலத்தைச் சேர்ந்த ஒரு சதி கல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 2 அடி உயரமும், 1.5 அடி அகலமும் உடையது.இக்கல்லில் வீரனின் அங்கங்களும், உடன் மனைவியின் உருவமும் வடிக்கப்பட்டு உள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கொண்டை, பட்டாடை, அணிகலன்கள் உள்ளன.