பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012
10:06
கொடுமுடி: கொடுமுடியில் காவிரி படித்துறையில், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தின் சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகளைக் கொண்ட கோவில் நகராகவும் கொடுமுடி விளங்குகிறது. இங்கு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆடி-18, மஹா சிவராத்திரி, சித்திரைத் தேர்த்திருவிழா உள்ளிட்ட விசேஷ காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி மலைக்கு தீர்த்தக் காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்துதான் புனிதநீர் எடுத்துச் செல்கின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை முன்னிட்டு, பல ஆண்டுகளுக்கு முன், கோவிலுக்கு நேர் எதிரே ஓடும் காவிரியாற்றில் படித்துறை அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலை சமாளிக்க கோவிலுக்கு எதிரில் கூடுதலாக புதிய படித்துறை அமைக்கப்பட்டது. படித்துறையில் பாதுகாப்பு வேலி இல்லாததால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர், ஆற்றின் ஆழம் மற்றும் நீரின் இழுப்பு காரணமாக குளிப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். பரிகாரம் செய்த பின் ஆற்றில் பக்தர்கள் கழற்றி விடும் வேட்டி, சேலை உள்ளிட்டவை, மற்றவர்கள் குளிக்கும் போது, காலைச்சுற்றி விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், பவானி. கூடுதுறையில் உள்ளது போல் பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி, நுகர்வோர் பாதுகாப்பு மையம், சொத்துவரி செலுத்துவோர் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சி.பி.ஐ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆறுமுகம், ""ஆற்றில் மூழ்கி பலர் பலியாகி விட்டனர். இச்சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான வேலி அமைக்கப்படாமல் காலம் கடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசும், அதிகாரிகளும் அலட்சியப் போக்கை கைவிட்டு, பக்தர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும், என்றார். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையால், கொடுமுடி டவுன் பஞ்சாயத்து மற்றும் மகுடேஸ்வரர் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவலநிலை இன்றும் தொடர்ந்து வருவது வருந்தத்தக்கது. காவிரியில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில், தற்போது இப்பணியை துவக்கினால், திட்டச் செலவு குறைவதுடன், சிரமமின்றி உடனடியாக பணியை முடிக்க முடியும்.