புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தேங்காய் நீர் பிரசாதம்: திட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2021 10:09
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்கும் விதமாக, இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக சார்பில் வீணாகும் தேங்காய் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீன கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நீர்வளத்துறை துறை மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு பயிர் பதன கழக இயக்குனர் அனந்த ராமகிருஷ்ணன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவிலில் தேங்காய் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தக் கருவி கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய், இதில், தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து, 50 லிட்டர் வரை நீரை சேமித்து வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என இந்திய உணவு பதன கழகம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.