பதிவு செய்த நாள்
28
செப்
2021
11:09
துாத்துக்குடி: குலசேகரப்பட்டணம் தசரா விழாவிற்கு பக்தர்கள் அனுமதியில்லை என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
குலசை., தசரா விழா குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது . மாவட்ட போலீஸ் எஸ். பி . , ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. 6 ம்தேதி நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சி, 15ம்தேதி நடைபெறும் தசரா சூரசம்ஹார நிகழ்ச்சி, இவை அனைத்தும் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும்.
இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. 16 ஆம் தேதி திருவிழாவின் நிறைவு நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை .அக். 7ம் தேதி மற்றும் 11 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் ஒரு குழுவுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் வந்து தங்கள் செட்டுகளுக்கான காப்பு கயிறுகளை கோயில் அலுவலகத்தில் உரிய அத்தாட்சி கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.