பதிவு செய்த நாள்
30
செப்
2021
02:09
அவிநாசி: அவிநாசி கோவில் தேர் ஷெட் மாற்றியமைக்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை பார்வையிட்டார். தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், கோவிலை பார்வையிட்டு, திருப்பணியின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேவைகள் குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் நேரில் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, கோவிலின் வடிவமைப்பு, கற்சிற்பங்களை பார்த்து வியந்த அமைச்சர் மற்றும் கூடுதல் ஆணையர், கோவிலை பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும்; தகரத்தால் வேயப்பட்ட கூரையை மாற்றி, ஓடு வேயப்பட்ட கூரை அமைக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினர். தேர் ஷெட்டை பார்வையிட்ட அமைச்சர், அவற்றை மாற்றியமைக்க, அறிவுரை வழங்கினார். இதுதொடர்பாக, கோவிலில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. உதவி செயற் பொறியாளர் கண்ணன், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் முன்னிலையில், கோவில் மிராசுகள் உட்பட சிலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் கூறுகையில், கோவில் ஷெட் மாற்றியமைப்பது குறித்த ஆரம்பக்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அடுத்த கட்டப்பணி மேற்கொள்ளப்படும் என்றார்.