புட்டபர்த்தி : புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நவீன காஸ் தகன மேடை வசதி புட்டபர்த்தி நகர மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்படைக்கப்பட்டது. மேலாண்மை அறங்காவலர், ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதன் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் வசதிகளை விளக்கி இந்த நவீன தகன வசதியை ஒப்படைத்தார்.
‛அமர்தம் என இந்த எரியூட்டல் மையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கும் மேல் செலவில் இரண்டு ஏக்கரில் அமைந்துள்ள இந்த தகன மையம் நகராட்சி நிர்வாகத்துணையுடன் செயல்படும். அனைத்து சமூகத்தினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது. இங்கு இறந்தவர்களுக்கு மரியாதைக்குரிய வகையில் இறுதிச் சடங்குகளை செய்து கொள்ள முடியும். 2020 ல் சத்யசாய் ஆசியுடன் இந்த திட்டம் துவக்கி முடிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு அறை , ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி குளியல் வசதிகள், ஒரு அலுவலகம், ஊழியர் குடியிருப்பு மற்றும் பதிவு அறைகள் மற்றும் சடங்குகளை செய்வதற்கான சிறப்பு அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் உடலை தகனம் செய்ய விரும்பினால் அவரவர் மதச்சடங்குகள் நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள், நேரம் எரியூட்டல் தொடர்பான சில தகவல்களை கணினி மூலம் அறிந்து கொள்ளலாம். மாசு ஏற்படாமல் தடுக்க உயரமான புகை போக்கி மூலம் புகை வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. எரிக்கப்பட்ட உடல்களின் சாம்பல் முறையாக பேக் செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் மரியாதையுடன் ஒப்படைக்கப்படும். முற்றிலும் அனைவருக்கும் இலவசமாக மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஏழை மக்களுக்கு நிதிச்சுமையை குறைத்து பெரும் உதவியாக இருக்கும்.