பதிவு செய்த நாள்
01
அக்
2021
01:10
திருத்தணி:திருவாலங்காடு காளியம்மன் கோவிலில் மாயமான சூலத்திற்கு பதிலாக, புதிதாக தங்கத்தில் சூலம் செய்து, விரைவில் பிரதிஷ்டை செய்யப்படும், என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், காளியம்மன் கையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சூலம் திருடப்பட்டுள்ளது என்றும், அதற்கு பதிலாக வேறு சூலம் வைத்துள்ளதாகவும், நம் நாளிதழில் இரு நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியானது.பிரதிஷ்டைஇதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, வடாரண்யேஸ்வரர் மற்றும் காளியம்மன் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், கணேச குருக்கள் பணியில் இருந்த போது சூலம் காணாமல் போனது. பின், அவரே ஒரு சூலம் தயாரித்து வைத்து உள்ளார்; அவர் இறந்து விட்டார். புதிதாக தங்க சூலம் செய்து, அம்மனுக்கு பிரதிஷ்டை செய்யப்படும். கோசாலை விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: முன்னதாக அமைச்சர்சேகர்பாபு, திருத்தணி முருகன் கோவிலில், முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:திருத்தணி கோவிலில், புதிய திருமண மண்டபம், நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளி மற்றும் நிர்வாக பயிற்சி பள்ளி ஆகியவை 10.50 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மாற்று மலைப் பாதை அமைக்க, வனத்துறையினருடன் இணைந்து செயல்படுவோம். 10 ஆண்டுகளாக ஓடாத வெள்ளி மற்றும் தங்கத் தேரை பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், தங்கத் தேர் மட்டும், ஒரு மாதத்தில் மலைக் கோவிலில் உலா வரும். வெள்ளித்தேர் முழுதும் சிதலமடைந்துள்ளதால் சில மாதங்களாகும். ராஜகோபுரத்திற்கும், தேர் வீதிக்கும் இடையேயான படிக்கட்டுகள் கட்ட, விரைவில், டெண்டர் விடப்படும். முருகன் கோவிலுக்கான நிலங்களை ஆக்கிரமித்திருந்தால், யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து மீட்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், இணை ஆணையர்கள் ஜெயராமன், லட்சுமணன், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.