பதிவு செய்த நாள்
01
அக்
2021
12:10
கோழிக்கோடு: கேரளாவில் பகவான் கிருஷ்ணரின் உருவத்தை வரைந்த முஸ்லிம் பெண், அதை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்னா சலிம், 28; ஓவியர் இவருக்கு திருச்சூர் மாவட்டம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மிகவும் பிடிக்கும். முஸ்லிம் என்பதால், இவரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. கிருஷ்ணர் மேல் உள்ள பக்தியால், அவரது உருவத்தை பல வடிவங்களில் வரையத் துவங்கினார். இதற்கு அவரது வீட்டினர், சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஓவியம் வரைவதை அவர் கைவிடவில்லை.இவர் வரைந்த கிருஷ்ணர் ஓவியங்களைப் பார்த்த பலர், அதை பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர். மேலும், ஆண்டுதோறும் விஷு, ஜன்மாஷ்டமி நாட்களில் தான் வரைந்த கிருஷ்ணர் படத்தை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கோவிலுக்குள் செல்ல முடியாது என்பதால் படத்தை கோவில் ஊழியரிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டம், பந்தளம் அருகே உள்ள உளநாடு கிருஷ்ணசாமி கோவில் நிர்வாகத்தினர் ஜஸ்னா சலிமை சமீபத்தில் சந்தித்தனர். குழந்தை கிருஷ்ணர் ஓவியத்தை வரைந்து தரும்படி ஜஸ்னாவை வலியுறுத்திய கோவில் நிர்வாகத்தினர். அதை கோவிலுக்குள் வந்து நேரடியாக சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர். தங்கள் கோவிலுக்குள் மாற்று மதத்தினர் நுழைவதற்கு தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். இதைக் கேட்ட ஜஸ்னா சலிம் மகிழ்ச்சியடைந்து, குழந்தை கிருஷ்ணரின் ஓவியத்தை வரைந்து கோவிலுக்கு நேரடியாகச் சென்று வழங்கினார்.
இது பற்றி ஜஸ்னா சலிம் கூறியதாவது: கோவிலுக்குள் சென்று கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற என் கனவு நனவாகிவிட்டது. நுாற்றுக்கணக்கான கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்திருந்தாலும், என் வீட்டில் ஒரு படத்தை கூட நான் வைத்திருக்கவில்லை. என் மத நம்பிக்கை அதற்கு அனுமதியளிக்கவில்லை. கிருஷ்ணர் படம் வரைவதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த என் குடும்பத்தினர், என் மதத்தின் கட்டுப்பாடுகளை நான் முறையாக கடைப்பிடிப்பதை பார்த்து இப்போது ஆதரவு தருகின்றனர். துபாயில் பணியாற்றும் என் கணவரும், என் இரண்டு குழந்தைகளும் கிருஷ்ணர் படம் வரைவதில் எனக்கு எப்போதும் ஆதரவாக உள்ளனர். மாதந்தோறும் குறைந்தது ஐந்து கிருஷ்ணர் படங்களை வரைகிறேன். அந்த படங்களை 5,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.