சிவந்த நிறமுள்ள சிவபெருமானை நீலகண்டன் என்கிறோம். கண்டம் என்றால் கழுத்து. பாற்கடலைக் கடையும் போது, வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை எடுத்து உண்டார் சிவன். அது அவரது கழுத்திலேயே தட்டி நின்றது. விஷம் சாப்பிட்டால், உடல் நீலநிறமாவது இயற்கை. கழுத்துடன் நின்று போனதால், கழுத்து நீலநிறமானது. எனவே அவர் நீலகண்டன் ஆனார். அந்தப்பாம்பின் விஷம் பரவியிருந்தால், தேவர், அசுரர் யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள். பிறரைக் காப்பாற்ற தன்னுயிரையும் தர தயாராக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம். உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களாலும், அறிவில் சிறந்தவர்களாலும் மட்டுமே வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீயவிளைவுகளான நஞ்சையும் விழுங்க முடியும். நல்லவர்களுக்கு மட்டும் சோதனை வருவது ஏன் என சிலர் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் தெரியுமா? நல்லவர்களுக்கு மட்டுமே சோதனைகளைத் தாங்கும் மனவலிமை இருக்கிறது. அதன்மூலம் எல்லாருக்கும் நன்மை கிடைக்கிறது. இன்னொரு அரிய தத்துவமும் இதனுள் புதைத்திருக்கிறது. தேவர்களுக்கான நல்லவர்களுக்கு உதவப்போய், அசுரர்களான கெட்டவர்களும் உயிர் பிழைத்தனர். நாம் சிலரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கும் உதவுவதே சிறந்த பண்பு என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.