பதிவு செய்த நாள்
06
அக்
2021
08:10
சென்னை : வடபழநி கோவில் குளக்கரை காரிய மண்டப விவகாரத்தில், பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது .
மகாளய அமாவாசையை முன்னிட்டு, வடபழநி கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள காரிய மண்டபத்தை ஆக்கிரமித்துள்ள கட்சியினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு, ஆய்வு மேற்கெண்ட அமைச்சர் சேகர்பாபு, கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், காரிய மண்டபம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். பழநிக்கு நிகரான வடபழநி ஆண்டவர் கோவிலில் அதிகாலை, 5:30 மணி முதல் இரவு, 9:30 மணி வரை வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவில் பக்தர்களின் பிரார்த்தனை தலமாக விளங்குவதால் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் இருமடங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கோவில் குளக்கரையில் காரிய மண்டபம் ஒன்று உள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த அந்த காரிய மண்டபத்தை முன்னாள் எம்.எல்.ஏ.,வின் அடியாட்கள் ஆக்கிரமித்தனர். அங்கு காரியம் செய்ய வருவோரிடம் கணிசமான தொகை பெற்று, வசதிகள் செய்துக் கொடுப்பதாக கூறி, மாடவீதிகளை ஆக்கிரமித்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அவர்களின் வழக்கம்.மூதாதையர்களுக்கு நீர்நிலைகள், ஓடும் நீரில் காரியங்கள் செய்யவேண்டும். ஆனால், இந்த காரிய மண்டபத்தை பொறுத்தவரை அந்த வசதி ஏதும் இல்லை. குளத்திலும் தண்ணீர் இல்லாமல், பல ஆண்டுகள் நான்கு புறமும் கம்பிவேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது. அதனால், குளத்தில் இறங்கி பிண்டத்தை கரைக்க முடியாது. எனவே, இங்கு காரியம் செய்தால் எந்த பலனும் கிடைக்காது. மேலும், கோவிலுக்கு அருகில் தீட்டு காரிய மண்டபம் இருக்கவும் கூடாது. பிதுர் காரிய உணவினை மூதாதையராக காக்கைகள் வந்து சாப்பிட்டால் தான் அந்த பலன் கிடைக்கும். ஆனால், வடபழநி பொறுத்தவரை பிதுர் காரிய பிண்டங்கள் சாலையில் வீசப்படுகிறது. இது மூதாதையர்களை அவமதிக்கும் செயலாக உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வடபழநி ஆண்டவர் கோவிலில்தான் அதிகப்படியான திருமணங்கள் நடக்கின்றன. கோவில் தரிசனத்திற்கு வரும் திருமண ஜோடிகளை மாடவீதிகளை சுற்றும்போது, அமங்களமாக தீட்டு காரியங்களை பார்க்கவும், பிண்டங்களை மிதிக்க வேண்டிய அவலத்திற்கும் தள்ளப்படுகின்றனர். பக்தியோடு கோவிலுக்கு வருபவர்கள் இந்த நிகழ்வு முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பக்தர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.தி.மு.க., ஆட்சியில் காரிய மண்டபம் கோவில் நிர்வாகத்தின் வசம் மாநகராட்சி ஒப்படைத்தது.
இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், காரிய மண்டபத்திற்கு பூட்டு போடப்பபட்டது. வருமானம் இழந்த அ.தி.மு.க.,வினர் கோவில் நிர்வாகம் பூட்டிய பூட்டை உடைத்து, அராஜகமாக கைப்பற்றி காரியம் செய்வோரிடம் வசூல் வேட்டை நடத்தினர். இப்பிரச்னையை அப்போதைய அறநிலையத்துறை அமைச்சரும், மாநகராட்சியினரும் கண்டுக் கொள்ளவில்லை. இதனால், காவல்துறைக்கு முறையான புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, அ.தி.மு.க.,வினருக்கு பதில் தி.மு.க.,வினர் கோலோட்சி வந்தனர்.
மகாளய அமாவாசை என்பதால், திதி கொடுக்க வந்தவர்களிடம் ஒருவருக்கு, 200 ரூபாய் வீதமும், குடும்பத்திற்கு, 2,000 ரூபாய் வசூல்வேட்டை நடத்தினர். இந்நிலையில், வடபழநி ஆதிமூலப் பெருமாள் கோவிலை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபு, திடீரென காரிய மண்டபத்தினை பார்வையிட்டார். அங்கு, பணம் வசூலிக்கும் கட்சியினரை பார்த்து, எவ்வளவு வசூலிக்கின்றனர் என்றார். கட்சியினர், 50 ரூபாய் வசூலிப்பதாக கூறினர். இதையடுத்து, உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது எனக் கேட்ட அமைச்சர், இந்த ஆட்சியில் சட்டப்படி மட்டுமே அனைத்தும் செயல்பட வேண்டும். இனி யாரும் பணம் வசூலிக்க கூடாது என எச்சரித்தார். பின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இந்த காரிய மண்டம் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து வேறு இடத்திற்கு விரைவில் மாற்றப்படும், எனவும் கூறினார்.