பதிவு செய்த நாள்
07
அக்
2021
05:10
பெங்களூரு: கொரோனா தொற்றால் விநாயகர் சதுர்த்தி உற்சவத்துக்கு நிபந்தனைகள் விதித்ததை போல, தற்போது துர்காதேவி சிலை பிரதிஷ்டைக்கும், பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து, பூஜிப்பதை போல, தசரா நவராத்திரி நேரத்தில், பொது இடங்களில் துர்கா தேவி சிலையை வைத்து பூஜித்த பின் நீரில் கரைப்பது வழக்கம். கட்டுப்பாடு தற்போது கொரோனா 3வது அலை பீதியுள்ளதால், துர்காதேவி பிரதிஷ்டைக்கு, பெங்களூரு மாநகராட்சி கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரில் அக்டோபர் 11 முதல், 15 வரை பொது இடங்களில், துர்காதேவி சிலை வைத்து பூஜிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 4 அடியை தாண்டக்கூடாது.மாநகராட்சியின் மண்டல கமிஷனரின் அனுமதி பெற்று, ஒவ்வொரு வார்டிலும் ஒரு துர்கா சிலை மட்டுமே பொது இடத்தில் பூஜைக்கு வைக்க வேண்டும். சிலையை வைப்பதற்கு முன், அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். துர்கா பூஜை, பிரார்தனையின் போது, 50க்கும் அதிகமானோர் சேரக்கூடாது.துர்கா சிலை அமர்த்தும் சங்கங்கள், அமைப்புகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம். துர்கா தேவியை தரிசனம் செய்ய வி.ஐ.பி.,க்கள் வரும் போது, 100க்கும் மேற்பட்ட மக்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.சிலை கரைப்பின் போது, 10க்கும் அதிகமானோர் சேரக்கூடாது. சமூக விலகலை பின் பற்ற வேண்டும். சிலை கரைப்பு ஊர்வலத்தில், டி.ஜெ., இசை, டிரம்ஸ் பயன்படுத்தக்கூடாது. மண்டல இணை கமிஷனர் மற்றும் போலீசார் கூறும் இடங்கள், டேங்கர்கள், குளங்களில் மட்டுமே சிலையை கரைக்க வேண்டும்.கிருமி நாசினி பொது இடங்களில், துர்காதேவியை தரிசிக்க வருவோரை, நுழை வாசலில் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். பல இடங்களில் கிருமி நாசினி பாட்டில் வைக்க வேண்டும். நாற்காலிகள், மேஜைகள், தரையில் தினமும் மூன்று, நான்கு முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.நிகழ்ச்சி நடக்கும் இடங்களில், கொரோனா விதிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தகவல் கொண்ட பலகை வைக்க வேண்டும். துர்தாதேவி சிலை வைக்கும் அமைப்புகள், சங்கங்கள், மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.