திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு கருடசேவையின் போது பயன்படுத்த ஒன்பது திருக்குடைகள் நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டன.
திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவம் நடக்கும் போது அதன் ஐந்தாம் நாள் இரவு கருடசேவை நடத்தப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ வாகன சேவைகளில் மிக முக்கியமான சேவையாக கருதப்படுவது இந்த கருட சேவை. அதன்படி இன்று இரவு திருமலையில் கருட சேவை நடக்க உள்ளது. கருட சேவையின் போது பயன்படுத்த இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஏழுமலையானுக்கு ஒன்பது திருக்குடைகள், பத்மாவதி தாயாருக்கு இரண்டு திருக்குடைகள் என, 11 திருக்குடைகள் ஆண்டுதோறும் நன்கொடையாக சமர்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டும் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் அதன் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில், 11 திருக்குடைகள் கொண்டு வரப்பட்டன. அதில் இரண்டு திருக்குடைகள் பத்மாவதி தாயாருக்கு அளிக்கப்பட்டன. மீதமுள்ள ஒன்பது திருக்குடைகள் திருமலைக்கு கொண்டு வந்து ஏழுமலையான் கோவில் முன்பாக நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டியிடம் வழங்கப்பட்டன. கொரோனா காரணமாக இந்தாண்டும் திருக்குடை ஊர்வலம் நடத்தப்படாமல் வாகனம் மூலம் நேரடியாக திருமலைக்கு எடுத்து வரப்பட்டது.