சாத்தான்குளம் : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் ஆண்டாள் பற்றி அவதூறாக உள்ள பாடத்தை நீக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆண்டாள் பக்தர்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும் என இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார். நெல்லை எம்.எஸ்.யுனிவர்சிட்டியி பி.ஏ., பி.எஸ்.சி முதலாமாண்டு மாணவர்கள் பாடத்தில் ஆண்டாள் தேவதாசி எனவும், ஆபாசமாகவும் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பாடத்தை பாடப்புத்தகத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும். ஆண்டாள் பற்றிய அவதூறு பாடத்தை நீக்கும் வரை இந்து முன்னணியினர் சார்பில் பல்வேறு அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் கூறினார். சமீபகால பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடங்களாலும், படங்களாலும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகிறது. சமீபத்தில் அம்பேத்கர் பற்றியும், இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றியும் வந்த கார்ட்டூன் மூலம் விமர்சிக்கப்பட்டது. தற்போது ஆண்டாள் பெண் தெய்வம் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.