செந்துறையில் மாடு மாலை தாண்டும் வித்தியாசமான திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2021 10:10
நத்தம்: நத்தம் வட்டம் செந்துறை அருகே உள்ளது, பெரியூர்பட்டி கிராமம் இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ மந்தையம்மன் மற்றும் கருத்த நாயக்கர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் 96 கிராம மக்கள் மற்றும் 18 பட்டிக்கு கட்டுப்பட்ட குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் வளர்க்கும் மாடுகளுடன் கலந்து கொள்வது வழக்கம்.
அதேபோல் இத்திருவிழாவில் கலந்து கொண்ட குறிப்பிட்ட இன முக்கியஸ்தர்களுக்கு நாயக்கர் இன பெண்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். மேலும் அவர்களின் பாரம்பரிய முறைப்படி ஆண்கள் பெரும்பாலானோர் சட்டை அணியாமல் இடுப்பில் வெள்ளை வேட்டியும் தலையில் தலைப்பாகையும் கட்டியிருந்தனர். மேலும் திருவிழாவின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் என கும்மியடி, தேவராட்டம், சேர்வை ஆட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கியமான நிகழ்வாக மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி. இதில் கலந்துகொண்ட மாடுகளுக்கு பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் மாடுகளுடன் ராஜகம்பளத்து ஆண்கள் காலில் செருப்பு அணியாமல் ஓடி வந்து கோயில் முன்பு தரையில் போடப்பட்ட வெள்ளை துண்டை மூன்று முறை தாண்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. மேலும் திருவிழாவுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர்கள் இனமக்கள் கலந்து கொண்டனர்.