பல்லடம்: பல்லடத்தில், புதருக்குள் கிடக்கும் பழமையான சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் போஸ்ட் ஆபீஸ் வீதியில், ஸ்ரீகாளிங்கநர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் அருகே உள்ள காலி இடத்தில், பழமையான சுவாமி சிலைகள் புதருக்குள் கிடைக்கின்றன. தன்னார்வலர்கள் கூறுகையில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பல்லடத்தில் உள்ள கோவில்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. பராமரிப்புகள் மேற்கொள்ளாமல் விடப்பட்டதால், கோவில்கள் சிதிலமடைந்தும், ஆக்கிரமிப்புகள் காரணமாகவும் கேட்பாரற்று கிடக்கின்றன. அவ்வாறு, கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், புதர்கள் மண்டியும் கிடைக்கின்றன. கோவில் அருகே உள்ள காலி இடத்தில், பழமையான சிலைகள் புதருக்குள் கேட்பாரற்று உள்ளன. பாரம்பரியமிக்க சிற்பக் கலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால், அறநிலையத்துறை இது குறித்து கண்டுகொள்ளாதது கவலை அளிக்கிறது என்றனர்.