திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவம் முடிந்த நிலையில் நேற்று (அக்.,18) மட்டும் பக்தர்கள் காணிக்கையாக 3 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றிற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து வரவேண்டும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளின்படி திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 28 ஆயிரத்து, 513 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 13ஆயிரத்து, 707 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.01 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவு காரணமாக அதிகபட்சமாக ரூ.2 கோடி மட்டுமே உண்டியல் வசூலானது. இந்நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.