பதிவு செய்த நாள்
21
அக்
2021
03:10
பள்ளிப்பட்டு: ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி நேற்று, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், சி.வி., நாயுடு சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், ஞானபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.பள்ளிப்பட்டு பஸ் நிலையம் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாதபவுர்ணமியை ஒட்டி, நேற்று, காலை 10:00 மணிக்கு அன்னாபிஷேகம் மற்றும் அன்னகாப்பு நடந்தது. மதியம், 12:30 மணியளவில், மூலவரின் அன்னகாப்பு களையப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது.திருத்தணி அடுத்த, நாபளூர், அகத்தீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேகம் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், காலை 11:00 மணிக்கு, ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.திருத்தணி பகுதியில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர், வீரட்டீஸ்வரர், தாடூர் கடலீஸ்வரர், அகூர் அகத்தீஸ்வரர், பெரிய கடம்பூர் பெரிய கடம்பவனநாதர், திருக்குளம் அருகே உள்ள ஈஸ்வரன், ஆர்.கே.பேட்டை விசாலீஸ்வரர், வங்கனுார் வியாசேஸ்வரர், பொம்மராஜிபேட்டை ஜம்புலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது.