பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்ய முகூர்த்த விழா நேற்றுக்காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். வேதாரண்யம் புராண கால பெருமையுடைய தலமாகும். இங்குள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில், அகஸ்தியருக்கு சிவö பருமான் திருமண கோல காட்சி அருளியதும், வேதங்களால் பூ ஜிக்கப்பட்டதும், சப்த விடங்கர் தலங்களில் ஒன்றானதும் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் எழுந்தருளி இந்த கோவில் திறக்க, அடைக்க தேவாரம் பாடியுள்ளனர். இத்தகைய பெருமைமிக்க கோவிலில் மாசிமக திருவிழாவில் தியாகராஜர் தேரில் எழுந்தருளி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேரோட்டத்தில் அச்சு முறிந்ததால், தேரோட்டம் தடைபட்டது. இதையறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது புதிய தேர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கினார். ஆனால், அடுத்து வந்த தி.மு.க., ஆட்சியில் இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தேர் அமைப்பு பணியை விரைந்து முடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தொடர்ந்து, புதிய தேர் செய்ய முகூர்த்த விழா ஸ்வாமி சன்னிதி முன் உள்ள மண்டபத்தில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள் திருத்தேர் செய்யப்படும் மரத்துக்கு அபிஷேக, ஆராதனைகளை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை கலெக்டர் முனுசாமி, மயிலாடுதுறை எம்.பி., மணியன், வேதாரண்யம் எம்.எல்.ஏ.,காமராஜ், தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ, நகராட்சி தலைவர் மலர்க்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.