பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ராசிபுரத்தில், ஆண்டு முழுவதும் அம்மன் சுமங்கலியாக காட்சி தரும் ஒரு சில கோவில்களில் ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலும் முதன்மையானதாகும். கோவில் சீரமைப்பு பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், கும்பாபிஷேக விழா எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த, 21ல் கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 22 முதல் காலயாக பூஜை, 23 இரண்டாம் காலயாக பூஜை, 24 மூன்றாம் கால யாக பூஜை, தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி நடத்தப்பட்டது. விழாவையொட்டி, சனிக்கிழமை யாக சாலை அமைத்து மகா கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு கோபூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை நடந்தது. தொடர்ந்து, மகா சங்கல்பம், பூர்ணாஹுதி, மேளதாள ஊர்வலத்துடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால் யாக சாலையிலிருந்து கொண்டு வரப்பட்டன. 10:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,ராஜேஸ்குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.