பதிவு செய்த நாள்
01
நவ
2021
01:11
உத்திரமேரூர் : மானாம்பதி பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்ட, ஐந்து தலை நாக வாகனத்தின், கரிகோலம் எனப்படும் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதியில் உள்ள பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதியுலா செல்வதற்காக ரிஷபம், யானை, கிளி, பெருச்சாளி, மயில், சந்திர பிரபை, சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன.இந்நிலையில், கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. உற்சவத்திற்கு, நாக வாகனம் இல்லாததால், மானாம்பதி சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், 1.5 லட்சம் ரூபாய் செலவில், அத்தி மரத்தால் ஆன, ஆமை மீது அமர்ந்த நிலையில், 10 அடி உயரத்தில், ஐந்து தலை நாக வாகனம் புதிதாக செய்யப்பட்டது.புதிய வாகனத்தின், கரிகோலம் எனப்படும் வெள்ளோட்டம், நேற்று காலை நடந்தது. நான்கு மாட வீதியிலும் உலா வந்த நாக வாகனத்திற்கு, பக்தர்கள் கற்பூரம் ஆரத்தி எடுத்தும், எலுமிச்சை, தேங்காய், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் திருஷ்டி கழித்தனர்.அதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்திடம் நாக வாகனம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.